பல்லடம்: "ரோடு விரிவாக்க பணிக்காக, குடிசைகளை அகற்றக்கூடாது' என்று கூறி, பல்லடம் பனப்பாளையம் அரிஜன காலனி பொதுமக்கள், தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
மெயின் ரோடு வளைவில் அரிஜன காலனி உள்ளதால், ரோடு விரிவாக்க பணிக்காக, 50க்கும் மேற்பட்ட குடிசைகள் அகற்றப்பட வேண்டி யிருக்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் அரிஜன காலனி பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 75 பேர், நேற்று காலை 8.00 மணிக்கு நகராட்சி கவுன்சிலர் பொன்னுசாமி தலைமையில் திரண்டனர். அங்கிருந்து நடந்தே, பல்லடம் தாலுகா அலுவலக வளாகத்திற்கு வந்தனர். பின், தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். "50 ஆண்டுகளாக அரிஜன காலனியில் வசிக்கும் தங்களை, வெளியேற்றக் கூடாது. வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அங்கு குடிசைகள் அமைத்து கொடுத்தால் மட்டுமே அரிஜன காலனியில் இருந்து வெளியேறுவோம் அல்லது ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என ரேஷன் கார்டுகளை தலைக்கு மேல் உயர்த்தி, காண்பித்தபடி கூறினர்.
தகவல் அறிந்து பல்லடம் தாலுகா அலுவலகம் வந்த, டி.எஸ்.பி., ராமலிங்கம், வி.ஏ.ஓ., பாலசுப்ரமணியம் ஆகியோர், "குடிசைகளை அகற்ற மாட்டோம். அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மாற்று இடம் அளித்தபின்பே, அகற்றப்படும்' என உறுதியளித்தனர். அவர்களின் உறுதிமொழியை ஏற்று, 40 நிமிடங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரிஜன காலனி பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்பொதுமக்கள் பனப்பாளையம் செக்போஸ்ட் பகுதியில் ஐந்து நிமிடம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.